மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன.
இதனைhttp://www.microsoft.com/office/preview/en என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள உங்களிடம் விண்டோஸ் லைவ் ஐ.டி. ஒன்று தேவை. இல்லாதவர்கள் உடனே ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.
விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பில், எந்த சாதனம் வழி நுழைந்தாலும், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ், நிலைகள் கிடைக்கும். எனவே எங்கிருந்து இதனை இயக்கினாலும், உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் உருவாக்கிய நிலைகள் கிடைக்கும்.
ஆபீஸ் 2013 தொகுப்பு வர்த்தக ரீதியாக என்று விற்பனைக்கு வரும் என இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரக் கூடும் என உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், ஹோம் அண்ட் ஸ்டூடண்ட் ஆபீஸ் 2013 (Office Home and Student 2013) இலவசமாக இணைந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இதில் வேர்ட், எக்ஸெல், ஒன் நோட், பவர்பாய்ண்ட் ஆகியவை இருக்கும். மைக்ரோசாப்ட் தர இருக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசிக்களில், ஆபீஸ் 2013 பதிப்பு இலவசமாகவே பதிந்து தரப்பட இருப்பதால், இந்த முடிவினையும் மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது இயற்கையே.
ஆபீஸ் 2013 தொகுப்பு இயக்க தேவையான ஹார்ட்வேர் கூறுகள் பின்வருமாறு. ஒருகிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் அல்லது SSE2 இன்ஸ்ட்ரக்ஷன் செட்டுடன் கூடிய x86/x64 ப்ராசசர், 32 பிட் இயக்கமாக இருப்பின் 1 ஜிபி ராம் நினைவகம், 64 பிட் இயக்கமாக இருந்தால் 2 ஜிபி ராம், விண்டோஸ் 7 அல்லது பின்னர் வந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது விண்டோஸ் சர்வர் 2008/2012 ஆகியவை தேவைப்படும்.
எனவே விஸ்டா அல்லது எக்ஸ்பியில் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், புதிய ஆபீஸ் 2013 தொகுப்பு வேண்டும் என்றால், உயர்நிலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஆபீஸ் 2003, 2007 அல்லது ஆபீஸ் 2010 இயக்கிக் கொண்டிருப்பவர்கள், அதனை சிஸ்டத்திலிருந்து நீக்க வேண்டியதில்லை. ஆபீஸ் 2013 பதிந்த பின்னர், இரண்டையும் தனித்தனியே இயக்கி வேலைகளை மேற்கொள்ளலாம்.
வழக்கமான எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீனத் தொகுப்பாகத்தான், ஆபீஸ் 2013 வெளியிடப்படுகிறது. ஆபீஸ் 365 தொகுப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனால், ஆபீஸ் 365 பிளாட் பார்மில் இயங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர்களுக்கு, ஆபீஸ் 2013 கூடுதல் வசதியாகத் தரப்படுகிறது.
ஆபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்படும். எனவே எங்கிருந்தும், எந்த சாதனம் மூலமாகவும், உங்கள் பைல்களை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முற்றிலுமான ஒரு மாறுதலுக்குக் கொண்டு வந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் ஆபீஸ் தொகுப்பிலும் அதே வேகத்துடன் மாற்றங்களையும் கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது. எக்ஸெல், வேர்ட் மற்றும் பவர்பாய்ண்ட் ஆகிய அனைத்தும் முழுமையான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
தொட்டு இயக்கு:
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொட்டு இயக்கு தொழில் நுட்பத்திற்கேற்ப ஆபீஸ் 2013 தொகுப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் டாகுமெண்ட்டைக் கிள்ளி விரிக்கலாம். படங்களை விரல்களால் ஸூம் செய்திடலாம். ஸ்டைலஸ் வைத்து முதலில் கிறுக்கலாம்; பின்னர் அதனையே டெக்ஸ்ட்டாக மாற்றி பதிந்து வைக்கலாம்.
ஸ்டைலஸ் பேனாவினை, பிரசன் டேஷன் காட்டுகையில் லேசர் பாய்ண்ட்டர் போலப் பயன்படுத்தலாம்; வண்ணம் தீட்டலாம்; நம் தவறுகளைத் திருத்தலாம். இவற்றுடன் மவுஸ் மற்றும் கீ போர்டும் செயல்படும்.
வேர்ட் புரோகிராமில், புதிய மெனு மற்றும் ரிப்பன்கள் கொண்டு வந்த பின்னர், எந்தவிதமான பெரிய
மாற்றமும் ஏற்படுத்தப்படாமல் இருந்தன. இப்போது மிக அதிகமான இடம், தேவையற்ற எதுவும் இல்லாமல் சுத்தமான கிளீன் ஸ்லேட் போன்ற தளம் தரப்படுகிறது. பயனாளர்கள் விருப்பப்பட்டால், ரிப்பன் இன்டர்பேஸையும் மறைத்து வைத்து இயக்கலாம். ஆபீஸ் இப்போது அனைத்து வகை சாதனங்களிலும் இயங்குவதால், டாகுமெண்ட்கள் திரையின் அளவிற்கேற்ப சுருங்கி விரிந்து படிக்க எளிதாக அமைக்கப்படுகின்றன.
ஆபீஸ் 2013 தொகுப்பின் மிகப் பெரிய வசதியாக, அதில் தரப்பட்டிருக்கும் பி.டி.எப். பைல் படிக்கும், உருவாக்கும் வசதியினைக் கூறலாம். பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்ட் தொகுப்பிலேயே எடிட் செய்திடலாம். பி.டி.எப். பைலை இதிலேயே திறக்கலாம்; அதன் ஹெடர், வரிசைப் பத்தி, புட்நோட் என அனைத்தையும் காணலாம்; அதன் கிராபிக்ஸ் வரை எடிட் செய்திடலாம். டேபிள்களைக் கூட, நீங்களே அவற்றை உருவாக்கியது போல எடிட் செய்திடலாம்.
ஆபீஸ் 2013 தொகுப்பில், நெட்வொர்க் இணைப்பினை எளிதாகப் பெறலாம். விண்டோஸ் டேப்ளட், பி.சி., அல்லது விண்டோஸ் போன் என எந்த சாதனத்தில் இதனை இயக்கினாலும், ஸ்கை ட்ரைவ் மூலமாக, ஆபீஸ் பைல்களைப் பெற்று இயக்கலாம். மாறா நிலையில் இந்த ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவில் உங்கள் பகுதிக்குச் செல்கின்றன.
டாகுமெண்ட்களைப் பார்க்க புதியதாக Reader என்னும் வியூ தரப்படுகிறது. இந்த வியூவில் டாகுமெண்ட்களைப் பார்க்கையில், ஒவ்வொரு பத்தியின் முன்னரும் ஒரு சிறிய முக்கோணம் காணப்படுகிறது. இந்த முக்கோணம் சார்ந்த பத்தியினைப் படித்த பின்னர், பாரா சுருக்கப்பட்டு தொடர்ச்சி காட்டப்படுகிறது. அடுத்த பக்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.
டாகுமெண்ட் ஒன்றைப் படித்து செயல்படுத்துகையில், எதுவரை நீங்கள் எடிட் செய்தீர்களோ, அந்த இடம் புக் மார்க் போல குறித்து வைக்கப்படுகிறது. அடுத்த முறை அந்த டாகுமெண்ட்டினை வேறு எந்த சாதனத்தில் திறந்தாலும், இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்தில் திறக்கப்பட்டு காட்டப்படுகிறது.
டாகுமெண்ட்டில், இணையதளத்திலிருந்து பெறுபவற்றை அப்படியே இணைக் கலாம். அதற்கான லிங்க் அமைக்கலாம். அவற்றை டாகுமெண்ட்டை மூடாமலேயே பார்க்கலாம். பதிக்கப்பட்ட வீடியோ அளவில் சிறியதாக இருந்தால், அதனை விரித்துப் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆபீஸ் 2013 தொகுப்புடன் ஸ்கைப் வசதியும் கிடைக்கிறது. ஆபீஸ் தொகுப்பின் சந்தாதாரர் ஆனவுடன், ஒவ் வொரு மாதமும் 60 நிமிடங்கள் ஸ்கைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் தொகுப்பில் டிஜிட்டல் நோட் டேக்கிங் வசதி கிடைக்கிறது. தொடுதிரை, ஸ்டைலஸ் பென், கீ போர்ட் என எதனைப் பயன்படுத்தியும் குறிப்புகளை நினைத்த மாத்திரத்தில் அமைக்கலாம்.
பவர் பாய்ண்ட் தொகுப்பிலும் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய வியூ கொடுக்கப்பட்டு, அதில் அடுத்து நீங்கள் பெறும் ஸ்லைடுகள், பிரசன்டேஷன் நேரம், ஸ்பீக்கர் நோட்ஸ் ஆகியவற்றைத் தனியே பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் பல புதிய அம்சங்களை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மைக்ரோசாப்ட் இந்த வகைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளோடு போட்டியில் இறங்கியுள்ளது எனலாம். ஆப்பிள் தங்கள் புரோகிராம்கள் அனைத்து வகைகளிலும் தனித்தன்மை பெற்றவை என்றும், அதே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது எளிது என்றும் கூறி வருகிறது.
""நான் மட்டும் என்ன சளைத்தவனா! பார் என் புரோகிராமினை'' என விண்டோஸ் 8 ஓ.எஸ். மற்றும் ஆபீஸ் 2013 தொகுப்பினை மைக்@ராŒõப்ட் களம் இறக்குகிறது. இன்னும் என்ன புதிய வசதிகள் கிடைக்கின்றன என்று போகப் போகத் தெரியவரும்.
No comments:
Post a Comment